தானத்தில் சிறந்த உறுப்பு தானம்

thaanaththil chiranthathu annathaanam enru cholvathundu. aanaal maruththuva ariviyal athivaekamaaka valarnthu kondirukkum inraiya choolnelaiyil, thaanaththil chiranthathu manetha uruppukalin thaanam enruthaan cholla vaendum. udalin mukkiya uruppu paluthadainthu, uyirilakkum nelaiyil ulla oruvarukku, aruvai chikichchai cheythu vaeru oruvarin uruppai poaruththuvathan moolam vaalvalikka mudiyum enum maruththuva kandupidippu, manetha kulaththirkuk kidaiththulla mikap periya varam. irantha oruvarin uruppukalai thaanam cheyvathan moolam eddu … Continue reading "thaanaththil chirantha uruppu thaanam"
thaanaththil chirantha uruppu thaanam

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வதுண்டு. ஆனால் மருத்துவ அறிவியல் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தானத்தில் சிறந்தது மனித உறுப்புகளின் தானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உடலின் முக்கிய உறுப்பு பழுதடைந்து, உயிரிழக்கும் நிலையில் உள்ள ஒருவருக்கு, அறுவை சிகிச்சை செய்து வேறு ஒருவரின் உறுப்பை பொருத்துவதன் மூலம் வாழ்வளிக்க முடியும் எனும் மருத்துவ கண்டுபிடிப்பு, மனித குலத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரம்.

இறந்த ஒருவரின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் எட்டு பேரை வாழ வைக்க முடியும், 50 பேரின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

நமக்கு நெருக்கமான ஒருவரின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், இறந்த அந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்து, வேறு ஒருவரை வாழ வைப்பதன் மூலம் அக்குடும்பத்தினர் ஓரளவு ஆறுதல் பெறலாம்.
உடல் உறுப்பு தானம் இரண்டு வகைப் பட்டது. முதலாவது, ஒருவர் தான் உயிருடன் இருக்கும் பொழுதே தன் உடலின் உறுப்பை மற்றொருவருக்கு தானமாக வழங்குவது. இப்படி தானம் செய்பவர், உறுப்பு தேவைப்படுபவரின் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது நெருக்கமானவராகவோ இருக்கலாம்.

உயிருடன் இருக்கும்பொழுதே ஒருவர் தனது சிறுநீரகம், கல்லீரல்(ஒரு பகுதி) மற்றும் கணையம்(ஒரு பகுதி) போன்ற உறுப்புகளை தானம் செய்யலாம். இரண்டாவது வகை உறுப்பு தானம், இறந்தவரின் உடல் உறுப்புகளை அவர்களது உறவினர்களின் அனுமதியுடன் தானமாகப் பெறுவது.

இதயத் துடிப்பு நின்று போய் மரணம் எய்துபவர்களிடமிருந்து விழிகள் (cornea), , இதய வால்வு, தோல் மற்றும் எலும்புக்களைத் தானமாகப் பெறலாம். மூளைச் சாவு நிலையை அடைந்தவர்களிடமிருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் கணையம் போன்ற முக்கிய உறுப்புகளைப் பெற முடியும்.

நமது நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் இறந்தவர்களின் உறுப்பு தானம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றாலும், தானத்தின் மூலம் கிடைக்கும் உறுப்புகளை விட, அவற்றுக்கானத் தேவை பல மடங்கு அதிகமாக உள்ளது என்பதே நிதர்சனம்.

நமது நாட்டில் உறுப்புகள் செயலிழந்துபோவதன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் இரண்டரை லட்சம் பேர்கள் உயிர் இழக்கிறார்கள். உலகிலேயே அதிகமாக உறுப்பு தானம் செய்யப்படும் .

ஸ்பெயின் நாட்டில், 2016-ஆம் ஆண்டில் உறுப்பு தான விகிதம் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 36- ஆகவும், அமெரிக்காவில் 26-ஆகவும் இருந்தன.
இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த விகிதம் இந்தியாவின் 0.8 மட்டுமே.

மனித உறுப்புகள் வணிகப் பொருளாவதைத் தடுக்கவும், உறுப்பு மாற்று சிகிச்சையை முறைப்படுத்தவும் இந்திய அரசு 1994 ஆம் ஆண்டு மனித உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தை (Transplant of Human Organs Act,1994)  அமல்படுத்தியது.

அதற்குப் பிறகு பல முறை திருத்தங்கள் செய்யப்பட இந்தச் சட்டம், மனித உறுப்புகளின் விற்பனையை தடுப்பதுடன் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு யாரிடமிருந்து உறுப்பை பெறலாம் என்று விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

உயிருடன் இருப்பவர் தனது உறுப்பை தானமாக வழங்குவதாக இருந்தால் உறுப்பை தானமாகப் பெறுபவர், அவருடைய உடன்பிறந்தவர், கணவன் அல்லது மனைவி, பெற்றோர், குழந்தைகள், தாத்தா அல்லது பாட்டி போன்ற உறவினராகவோ அல்லது உணர்வு பூர்வமாக நெருங்கியவராகவோ இருக்க வேண்டும். உறுப்பு அளிப்பவருடன் எந்த விதமான பணப் பரிமாற்றமும் இருக்கக் கூடாது.

இதுபோன்ற விதிமுறைகளை வகுக்கிறது சட்டம். மூளைச்சாவை அறிவிப்பதற்கும் இந்தச் சட்டம் அனுமதி வழங்குகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று சிகிச்சை அமைப்பும் (National Organ and Tissue Transplantation Organization) , பிராந்திய மற்றும் மாநில அமைப்புகளும் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் கொள்முதல், ஒதுக்கீடு மற்றும் விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் எல்லா மருத்துவமனைகளும், கண் வங்கிகளும் இந்த அமைப்பில் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிப் பதிவு செய்து கொள்ளாத மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய அனுமதி இல்லை.
பொதுவாக மூளைச் சாவு என்பது விபத்தின் காரணமாக மூளையில் ஏற்படும் பலத்த காயம் அல்லது மூளையில் ரத்தப்போக்கு போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது.

மூளைச் சாவு நிலையை அடைந்த எந்த ஒருவரிடமிருந்தும் உறுப்புகளை தானமாகப் பெற முடியும் என்றாலும், நமது நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளை பெறும் விகிதம் 15 -20 விழுக்காடு மட்டுமே. மாநிலங்களைப் பொருத்தவரை கேரளம் (90%), தமிழ்நாடு (67%), மகாராஷ்டிரம் (57%) போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது.

சென்ற ஆண்டு (2016) நமது நாட்டில் சாலை விபத்துகளில் தினசரி 400-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது என்ற புள்ளிவிவரம் இல்லையென்றாலும், ஐந்தில் மூன்று பேர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாகவே இறந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தலையில் பலத்த காயம் ஏற்படுவது மூளைச்சாவுக்கான முக்கிய காரணம். ஆனால் சென்ற ஆண்டு மூளைச்சாவின் காரணமாக இறந்தவர்களில், 807 பேரிடமிருந்து மட்டுமே உடல் உறுப்புகள் தானமாக கிடைக்கப் பெற்றுள்ளன.
நமது நாட்டில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், தில்லி, சண்டிகர் உள்ளிட்ட பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், வட கிழக்கு மாநிலங்கள் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளன.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு குடும்பத்தினரின் சம்மதம் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், மருத்துவர்கள் மூளைச் சாவுகளை அறிவிப்பதில் காட்டும் தயக்கம், வழிமுறைகளைப் பற்றிய அறியாமை, குடும்பத்தினரிடம் உறுப்பு தானத்தைப்பற்றி பேசுவதற்கு மருத்துவமனைகளில் ஆலோசகர்கள் இல்லாமை போன்ற காரணங்களும், மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைப் பெறுவதற்கு தடையாக இருக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் விபத்தினால் ஏற்படும் சாவுகளில் காவல்துறையினரின் விதிமுறைகள், இறந்தவரின் உடலைப் பெறுவதில் கால தாமதம் மற்றும் மருத்துவமனையில் இறந்தவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுப்பதற்கான வசதிகள் இல்லாமை போன்றவையும் இறந்தவரின் உறுப்புகள் பயனில்லாமல் போவதற்கான காரணங்கள்.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடலிலிருந்து பல உறுப்புகளைப் பெறலாம் என்பதனால் இதைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை உறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கவும், உறுப்புகளின் மாற்றுச் சிகிச்சைக்கான வசதிகளை பெருக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் நமது நாட்டில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் எண்ணிக்கையும், சிகிச்சையின் வெற்றி விகிதமும் அதிகரித்து வருகின்றன என்றாலும், இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு ஆகும் செலவோ மிகஅதிகமாகவேஇருக்கிறது.

கல்லீரல் அல்லது இதய மாற்று சிகிச்சைக்கு சுமார் ரூபாய் இருபத்து ஐந்து இலட்சம் வரை செலவழியலாம். சாதாரண மக்களால் எட்ட முடியாத உயரத்தில் உள்ள, இந்த உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் ஏழை எளிய மக்களும் பயனடையும் விதத்தில், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம் போன்ற மாநில அரசுகள் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆனால் இப்படிப்பட்ட காப்பீட்டு திட்டங்களினால் மிகச் சிலரே பயனடைகிறார்கள். நாட்டிலுள்ள ஏனைய தனியார் மற்றும் பொதுத்துறையிலுள்ள மருத்துவ காப்பீடு திட்டங்கள் எதுவுமே உடல் மாற்றுச் சிகிச்சைக்கு ஆகும் செலவை முழுமையாக ஈடு செய்வதில்லை.

அதிகம் பேசப்படாத மற்றொரு தானம், இறந்தவர்களின் உடல் தானம். 1948-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அனாடமி சட்டத்தின்படி, ஒருவர் உயிருடன் இருக்கும்பொழுதே தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ கல்விக்கு அல்லது மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவும் வகையில், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு தானமாக எழுதி வைக்கலாம்.
ஆனால் அப்படி அவர்கள் எழுதி வைத்திருந்தாலும், பல சமயங்களில் குடும்பத்தினர் இறந்தவரின் உடலைக் கொடுக்க முன்வருவதில்லை. இறந்தவர்களின் உடலை ஐதீகப்படி தகனம் அடக்கம் செய்யாவிட்டால் ‘அந்தப் பாவம்’ அவரது சந்ததியரை பாதிக்கும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். இறந்தவரின் உடல் தானம் என்பது வெகு அபூர்வமாகவே நடக்கிறது.

நம் உடல் பலருடைய வாழ்வுக்கு பயனுள்ளதாக அமையும் என்கிற எண்ணத்தில் ஒவ்வொருவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். உறுப்பு தானம் அதிகரிக்க வேண்டுமானால், அரசும் தொண்டு நிறுவனங்களும் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

 

Popular Post

Tips