மொழித்தெரிவு :
தமிழ்
English


தேவையா?

thaevaiyaa? nedujchaalaiyil sareyana valiyil kaaril chelpavarkal

தேவையா?

நெடுஞ்சாலையில் சரியான வழியில் காரில் செல்பவர்கள் பிரயாணம் சுகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. அடுத்தவர் ஓவர்டேக் செய்துவிட்டால் நாமும் டாப்புக்கு ஏற்றிப் பறக்கிறோம். அடுத்தவர் நேரம் நல்லாருக்கும், போய்க்கொண்டேயிருப்பார். நாம் ஒரு ஓரத்தில் குப்புற அடிக்க விழுந்து கிடப்போம்.

 

தேவையான இடத்தில் வேகத்தைக் கூட்டி, அவசியமான இடங்களில் வேகத்தைக் குறைத்து, ஏன் சிறிது நிறுத்திக்கூடச் சென்று, காரோட்டும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து மகிழ்ந்து, பேருந்துகளை சரியான அளவிலே ஓவர்டேக் செய்து, சாலையோரப் புளியமரப் பெட்டிக்கடைகளிலே ஒரு டீ, வடை சாப்பிட்டு நம் பிரயாணத்தை மட்டும் கவனித்துப் போய்க்கொண்டே இருப்போமானால்….

 

நிற்க…

 

தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் (Stressfull mind) பற்றிப் பரபரப்பாகப் பேசுவதென்பதே ஒரு ஃபேஷனாகிவிட்டது.

 

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளிதழ்களிலும், இதர அச்சு ஊடகங்களிலும், சுவர் விளம்பரங்களிலும், மற்றும் தொலைக்காட்சிகளிலும் மன அழுத்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களும், தீர்ப்பதற்கான வழிவகைகளும் சொல்லப்படுகின்றன.

 

இந்த லௌகீக வாழ்க்கையில் பொருள் சார்ந்த விஷயங்களும், வசதிகளும் அதிகரித்து விட்டன. ஆனால் மனம் சார்ந்த விஷயங்கள் அமுக்கப்பட்டு விட்டன. அதன் விளைவே இந்த மன அழுத்தப் பிரச்சினைகளும், புற்றீசல் போலக் கிளம்பிவரும் கவுன்சிலிங் செண்டர்களும்.

 

நமக்கு எப்போதுமே தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதைதான். நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, “ஒவ்வொரு செயலுக்கும் வினைக்கும், சரிசமமான எதிர்வினை உண்டு”. இதைப் பெரும்பாலானோர் உணர்வதில்லை.

 

மிக முக்கியமாக, கல்வி கற்றவர்கள்தான் இப்பேர்ப்பட்ட மனநிலையை அடைகின்றனர் என்பது அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்தி. கல்லாதோர்க்கு “இருப்பதே வாழ்வு; இல்லாவிட்டாலும் நிறைவு” என்ற மனப்பான்மை உள்ளது. இதனால் அவர்கள் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாவதில்லை.

 

வாழ்க்கையின் அனைத்து புறத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்குண்டான வசதிகள் கை நிறைய சம்பாதிப்பவர்களுக்கு உண்டு.

 

எங்கெங்கிலும் உடனே தொடர்பு கொண்டு தகவலைத் தெரியப்படுத்த செல்போன், ஓரிடத்திற்கு உடனே போய்ச் சேர பேருந்து வசதிகள்; இருசக்கர வாகனம், காலை இரவு டிபனுக்கு இட்லி தோசைக்கு, மாவுக்கடை பக்கத்திலேயே, இணையத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை, கேளிக்கைக்கு டிவி, இன்னும் என்னென்னவோ…

 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

எஸ்.ஜே.சூரியா சொன்னதுபோல, “எல்லாம் இருக்கு…. ஆனா.. இல்ல; இருக்கறது மாதிரி இருக்கு.. இல்லாதது மாதிரியும் இருக்கு; இருக்கறது..இல்ல; இல்லாதது இருக்கு….”. இப்படித்தான் தலையில்லாக் கோழி போலே ஓடிக்கொண்டு திரிகிறோம்.

 

ஒரு அடிப்படை விஷயத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். தெரிவதை விட, “புரிந்து கொள்ள” வேண்டும். புரிவதையும் தாண்டி, மனதில் பசுமரத்தாணி போல இருத்த வேண்டும். இந்நிலவுலக வாழ்விற்குத் தேவை ஆரோக்கியமான உணவு, உடுத்த உடை, இருக்க உறைவிடம்.

 

இதைத் தாண்டிய அத்தனை விஷயங்களுமே “எக்ஸ்ட்ரா” தான். இந்த எக்ஸ்ட்ராக்களில் ஏற்படும் மேடு பள்ளங்கள் தாம் நம் மன ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன.

 

நிற்கச் சொன்ன இடத்திலிருந்து தொடர்வோம்.

 

…. கவனித்துப் போய்க்கொண்டே இருப்போமானால் பயணம் சுகிக்கும். வாழ்வும் தித்திக்கும். நம்மை ஓவர்டேக் செய்பவர்களை நமது போட்டியாளர்களாக நாம் ஏன் பாவிக்க வேண்டும். நமது பணி எதுவோ அதைச் செய்து, போக வேண்டிய இடம் எதுவோ அதைப் போய்ச் சேர வேண்டியதுதானே! ஓவர்டேக் செய்பவர்கள் மட்டுமல்ல.. எதிரில் நம்மை நோக்கி வருபவர்களையும் கவனித்து, அவர்கள் வேகத்தையும் கணித்து, அதற்கேற்றாற்போல நாமும் வேகத்தை அட்ஜஸ்ட் செய்துகொண்டு.. இனிமையாய், மனநிறைவாய் குடும்பத்தோடு ஊருக்குப் போய்ச்சேர்ந்து கொண்டாடி மகிழ்வதென்ன!

 

சொல்வதற்கு, கேட்பதற்கு எல்லாம் நன்னாருக்கு.. அப்படீங்கறீங்களா?

 

முடியும்..நம்மால் முடியும். எல்லாமே நாம் உருவாக்கிக் கொள்வதுதானே! எடுப்பதும் சரி, தொடுப்பதும் சரி, விடுப்பதும் சரி… வினையாற்றுபவன் தன் வினையைத் தானே களைய வேண்டும்.

 

மன அழுத்தத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன. எல்லாக் காரணங்களையும் பட்டியலிட்டு அதற்குத் தீர்வெழுதுவதென்பது இயலாதது; தேவையில்லாததும்கூட.

 

என்ன.. பயணத்திற்குத் தயாரா? எக்ஸ்ட்ராக்களில் ஏற்படும் மேடு பள்ளங்களில் லாவகமாக வண்டியோட்டி ரசனையாய் நகர்த்துவோம், வண்டியை மட்டுமல்ல, வாழ்க்கையையும் தான்.


மேலும் பொதுக் கட்டுரைகள்

Tags : தேவையா, தேவையா?, thaevaiyaa?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]