மொழித்தெரிவு :
தமிழ்
English


காதல்

Kadhal anru, maadaththil veerriruntha cheethaiyai nookki raaman vachappaddathum Kadhal thaan.

காதல்

அன்று, மாடத்தில் வீற்றிருந்த சீதையை நோக்கி ராமன் வசப்பட்டதும் காதல்தான். இன்று இளசுகள் கூடும் இடங்களில் நின்று 'சைட்' அடித்து 'கரெக்ட்' ஆவதும் காதல்தான் என்று சொல்லும்போது, உண்மையான காதல் எது என்ற கேள்வி இப்போது வலுக் கட்டாயமாக எழுந்துள்ளது.

 

காதலில் தோற்ற தேவதாஸ், காதலை கல்லறையில் முடித்துக்கொண்ட லைலா-மஜ்னு, காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான்... என்று காதலால் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.

 

இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.

 

"அன்பே
நீ வெளியில் வராதே;
வண்ணத்து பூச்சிகளெல்லாம்
நீ தான் மலரென்று
தேனெடுக்க
முற்றுகையிட்டுவிடும்''

 

என்று, காதலிக்கும் போது காதலியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்த வர்கள்கூட, கடைசியில், 'அப்படியா நான் சொன்னேன்?' என்று அரசியல்வாதிகள் ஸ்டைலில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.


கள்ளக்காதல் அதிகரிக்க காரணம் என்ன? அன்பு கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறைதான்!

 

பணம், பணம் என்று பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயம், அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை மறந்தே போய்விட்டது.

 

ஒருவர் சாமியாரை பார்க்கச் சென்றார்.

 

"சுவாமி! திருமணம் ஆன புதிதில் கலகலப்பாக, அன்பாக என்னிடம் பேசிய என் மனைவி இப்போது என்னை கண்டாலே எரிந்து விழுகிறாள். நான் என்ன செய்வது?'' என்று கேட்டார்.

 

"தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு மனைவியிடம் கொடு. மீண்டும் கல கலப்பாக பேசுவாள் உன் மனைவி'' என்றார் சாமி யார்.

 

கேள்வி கேட்டவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

 

`மனைவி எரிந்து விழுவது ஏன் என்று கேட்டால், முதலிரவுக்கு செல்லும் வழிமுறையை கூறுகிறாரே இந்த சாமியார். ஒருவேளை போலிச் சாமியாராக இருப்பாரோ?' என்று கூட சந்தேகித்தார்.

 

தனது சந்தேகத்தை சாமியாரிடம் வெளிப்படுத்தாமல் வெளியேறினார். செல்லும் வழியில் பூக்கடையை அவர் பார்த்துவிட, 'இன்று ஒருநாள் தான் சாமியார் சொன்னபடி செய்து பார்ப்போமே' என்று ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனார், வீட்டுக்கு!

 

வீட்டு வாசலில் காலை வைக்கவே அவருக்கு பயமாக இருந்தது. எப்போதும் எரிந்து விழுபவள், இன்னிக்கு கொஞ்சம் அதிகமாக எரிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார்.

 

இருந்தாலும் மனதை ஒருவழியாக தேற்றிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.

 

கணவனை மல்லிகைப்பூவுடன் பார்த்த அவரது மனைவியின் முகத்தில் திடீர் மகிழ்ச்சி, பரவசம்!

 

ஓடி வந்து மல்லிகைப்பூவை வாங்கியவள், "என்னங்க... இந்த பூவை நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்'' என்று கொஞ்சினாள், சிணுங்கினாள்.

 

அவருக்கு நடப்பது கனவா? நனவா? என்ற சந்தேகமே வந்துவிட்டது. `சாமியார் கொடுத்த ஐடியா நல்லா ஒர்க்அவுட் ஆகுதே' என்று தனக்குள் சிலிர்த்துக் கொண்டார்.

 

மறுநாளும் மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றார். அப்போதும் அவரை அன்பாக வர வேற்று உபசரித்தாள் மனைவி.

 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

சிலநாட்கள் இப்படியே கழிந்தது.

 

ஒருநாள், தனக்கு மல்லிகைப்பூ ஐடியா கொடுத்த சாமியாரை பார்க்கச் சென்றார்.

 

"சுவாமி! நீங்க சொன்னபடியே மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனேன். வழக்கமாக, என்னை கண்டுகொள்ளாத என் மனைவி என்னை விழுந்து, விழுந்து கவனித்தாள், அன்பொழுக பேசினாள். எப்படி அவள் மாறினாள்?'' என்று கேட்டார்.

 

"அன்பை ஒருவரிடம் இருந்து தானாக பெற்றுவிட முடியாது. நாமும் அன்பாக இருந்தால் தான் அடுத்தவர்களிடம் அதே அன்பை பெற முடியும்'' என்று கூறிய சாமியார், "ஆமாம்... நான் சொல்வதற்கு முன்பு கடைசியாக எப்போது உன் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனாய்?'' என்று கேட்டார்.

 

சிறிதுநேரம் யோசித்தவர், "எப்படியும் ஏழு எட்டு மாதம் இருக்கும்'' என்றார்.

 

அதை சுட்டிக்காட்டிய சாமியார், "மனைவிக்கு தங்கம், வெள்ளி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துதான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அன்பாக ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்தாலே போதும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இனியாவது மனைவியிடம் அன்பாக இரு. அவளும் உன்னிடம் அன்பாக இருப்பாள்'' என்று வாழ்த்தி அனுப்பினார்.

 

நீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?

 

அதற்கு சில டிப்ஸ் :

 

நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.


வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும் ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும் கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

 

சிலரை எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் 'கடலை' போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட பலமணிநேரம் பேசுவார்கள். அதே போன்று நீங்களும் பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.


பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.


சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.


உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.


உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.


மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும்.


மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்!

 

அதனால் காதலியுங்கள், மனைவியை!


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : காதல், காதல், Kadhal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]