மொழித்தெரிவு :
தமிழ்
English

கல்வி

kalvi kadamaikalai eppoathum kaikalil irunthu naluvavidakkoodaathu. kalaththil iranki cheyalaarra munaiya vaendum.

கல்வி
11

காசுதான் ஒரு மனிதனை மிருகத்தனத்திற்கு மாற்றுவதாக நான் அறிகிறேன். காசு என்பது மனிதனை செழுமை அடைய வைக்கும் அதே வேளையில், எல்லாவற்றுக்கும் காசு காசு என்று போனால் வாழ்க்கை நரகமாகத்தான் முடியும்.

கல்வி என்பது பண்பாட்டை வென்றெடுக்க வேண்டும். அதே போல கல்வி என்பது என்ன? அதன் அடிப்படைத் தேவைகளைக் கண்டவர்கள் யார்? இது போன்ற சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கும் சில விளக்கங்களைத் தரலாம்.

நம் அளவில், நமது சமூகத்தின் அமைப்பு அளவில் கல்வி என்பது ஏதோ திடீரென்று தோன்றிவிடுவது போன்ற மாயை நிலவுகிறது. அதனால்தான் அந்தத் திடீரென்று நிலவும், ஒருவித தெய்வீகச் சக்தியாகக் காட்டப்படும் அந்தக் கல்வியைப் பணம் கொடுத்தேனும் அடைந்து விட வேண்டும்; அப்படித்தான் அடைய முடியும் என்று தவறான ஒரு கருதுகோள் நம்மிடம் நிலவுகிறது.

கல்வி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் சிறுகச் சிறுகச் சேமித்த, அடைந்த பயனாகும். இது ஒரு கூட்டுணர்வின் அடிப்படை அமைப்பு ரீதியானது. கல்வி ஒருபோதும் தனி மனிதனின் சொத்தல்ல; மாறாக, அது மனித சமூகம் கண்ட மாபெரும் கொடை. இந்த அடிப்படையில்தான் கல்வி அணுகப்படவேண்டும்.

ஒட்டுமொத்த மனிதக் கூட்டின் முன்னேற்றத்திற்காக, ஒட்டு மொத்த மனித சமூகமும் சேர்ந்து கண்டது கல்வியாகும். கல்வி என்பது மனித சமூகம் நீண்ட அனுபவத்தால் பெற்றது ஆகும். இது மாறும் போது, அல்லது மாற்றப்படும் போது அதாவது, தனி மனிதனின் பொருளாக ஆகும் போது இயல்பாகவே விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டு விடுகிறது. காசு மட்டுமே அதனைத் தீர்மானிக்கிறது.

இளைய சமூகத்திற்கு வாழ்ந்து விட்டுப்போன, வாழ்கிற முதுமைச்சமூகம் இயல்பாகத் தரவேண்டிய, மனித முன்னேற்றத்துக்குத் துணைபுரியும்படி செய்கிற ஒரு விஷயம் தான் கல்வி என்பதும்; அறிவு என்பதும். இதைச் சமூகம் தானாகவே நிர்பந்தமின்றி வழங்க வேண்டும். இது கடமை; வாழும் சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய அர்ப்பணிப்பு. இது மறுபடி மறுபடி தொடர வேண்டிய பயணம். இது எப்படி காசாக முடியும்? இது எப்படித் தனி மனித ஆளுமைக்குப் போனது? இதற்குக் காரணம் என்ன? இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் இனியாவது நாம் கொஞ்சம் சிந்தித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. விற்று வாங்க வேண்டிய ஒரு பொருளல்ல கல்வி. அப்படி கல்வி ஆகுமானால் இளைய சமூகத்திடம் ஒழுக்கத்தையும், நேர்மையையும், நீதியையும், அன்பையும், பாசத்தையும், பரிவையும், சமூகக் காதலையும் எப்படி எதிர்பார்க்கமுடியும்? எதிர்பார்ப்பதற்குச் சமூகத்திற்கு என்னதான் உரிமை இருக்கிறது?

ஒரு சமூகம் கல்வியையும், வாழும் இடத்தையும், உணவையும், ஆரோக்கியத்தையும் தமது மக்களுக்கு வழங்க வேண்டியது உலகத்தின் தலையாய, முதன்மையான பணிகளில், கடமைகளில் ஒன்று. இவை யாருக்கு, எங்கு இல்லையோ அல்லது தரப்படத் தாமதம் ஆகிறதோ அங்கு அந்தச் சமூகம் அமைதியும், அன்பும் அற்றதாகவே இருக்கும்.

கல்வி என்பது இயக்கத்திற்கானது; மாற்றத்திற்கு வழிகோலுவது. அப்படிப்பட்ட கல்வி காசால் பெற முடியாத ஒன்றாகும். காசால் பெறுவது ஒன்றே ஒன்றுமட்டும்தான். ஒன்றுக்கு நிகரான மற்றொன்றை அது தரும் அவ்வளவுதான். வேறு மனித ஆளுமைகளை அது உருவாக்க உதவாது.

வாழுகின்ற முதுமைச் சமூகம் இளைய சமூகத்திற்குச் செய்ய வேண்டிய முக்கியக்கடமைகளில் ஒன்று கல்வியைத் தரமானதாகவும், மேன்மையானதாகவும், அன்பு நிறைந்ததாகவும், எல்லோருக்கும் எளிமையாகவும் கிடைக்கும் படியும் செய்வதேயாகும்.

இதனை முதுமைச் சமூகம் உணரவேண்டும். இதனை இளைய சமூகம் உணர்த்தவேண்டும். இதுதான் இயக்கம். இதுதான் வாழ்க்கைப் பயணம் எல்லாம்.

இதில் இளைஞர் சமூகம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? மிகவும் எளிது… தன்முன் கிடக்கும் சரியற்ற சமூகத்தை அவர்கள் கைகட்டி, வாய்பொத்தி எல்லோரும் எல்லோரும்போல வாழ்ந்து விட்டுப் போகாதிருக்கவேண்டும். கடமைகளை எப்போதும் கைகளில் இருந்து நழுவவிடக்கூடாது. களத்தில் இறங்கி செயலாற்ற முனைய வேண்டும்.


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : கல்வி, கல்வி, kalvi

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]