மொழித்தெரிவு :
தமிழ்
English

ஆத்ம நிஷ்டை கைகூடி அமர்ந்திருக்கும் யோகியும் சமுத்திரமும் ஒன்று.

aathma neshdai kaikoodi amarnthirukkum yoakiyum chamuththiramum onru. pakavaan sreekirushnar, uththavarukku thodarnthu thaththaathraeyarin ovvooru kuruvaip parriyum koorik kondae vanthaar. uththavaa, kuru enpavar chareeram thaanki varavaendum enum avachiyamillai. chareeraththoduthaan enakku kuru vaendum enrum ethirpaarkkak koodaathu. intha ulakam...

ஆத்ம நிஷ்டை கைகூடி அமர்ந்திருக்கும் யோகியும் சமுத்திரமும் ஒன்று.
1

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு தொடர்ந்து தத்தாத்ரேயரின் ஒவ்வொரு குருவைப் பற்றியும் கூறிக் கொண்டே வந்தார்.‘‘உத்தவா, குரு என்பவர்

சரீரம் தாங்கி வரவேண்டும் எனும் அவசியமில்லை. சரீரத்தோடுதான் எனக்கு குரு வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. இந்த உலகம் முழுதுமே

குருவின் ரூபம்தான். நீ உன்னை உடலாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை உலகம் தெரியும். அப்போது உலகமே குருவாக நின்று உனக்கு

போதிக்கும். உற்றுப் பார்த்தால் காம்பினின்று உதிரும் இலைகூட ஏதேனும் சொல்லிக் கொடுக்கும். ஆனால் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல்

மட்டுமே முக்கியம். எதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்கிற தெளிவு அதைவிட முக்கியம்.‘‘தத்தாத்ரேயர் ஞானத்தைத் தேடி பயணித்தபோது

மாடப்புறாவிடமிருந்து ஞானம் பெற்றார். அது குருவாக நின்று பாதை காட்டியது. வற்றாத ஜீவநதிகள் கூட ஆசியளித்தன. தனக்குள் இருக்கும்

ஆத்மாவே வெளியிலே சூரியனாகவும் சந்திரனாகவும் நின்று போதித்ததை ஞானம் பெற்ற பிறகு நிச்சயம் ஒரு சாதகன் உணர்வான். அப்படித்தான்

இப்போது தத்தாத்ரேயர் மலைப் பாம்பை நோக்கி கைகூப்பினார். யது மன்னனிடம் மலைப்பாம்பு தனக்கு எவ்வாறு குருவாவார் என்று கூறவும்

செய்தார்.

‘‘மன்னா, மலைப் பாம்பு மரத்திலோ, பாறையின்மீதோ சுருண்டு கிடக்கும். இந்தப் பாம்பு இப்படிச் சோம்பலாக இருக்கிறதே, இதற்கு இரை எப்படி

கிடைக்கும் என்று யோசித்தேன். அந்த கணமே பாம்பின் முன்பு முயல் வந்து நின்றது. பாம்பு அதை சட்டென்று விழுங்கியது. உணவிற்காக அது

எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தானாக வந்த உணவை வேண்டாமென்று தடுக்கவில்லை. இறைவன் உணவை அதற்கு

அனுப்பி வைக்கிறான். அந்த மலைப் பாம்பு தன்னை நம்பியதா அல்லது இறைவனை நம்பியதா என்று எனக்குள் தொடர்ந்து வினாக்கள் எழுந்தன.
அப்போதுதான் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது. பகவான், தான் சிருஷ்டி செய்த விஷயத்தோடு சேர்த்து அதன் உணவையும் அனுப்புகிறான் என்று

புரிந்தது. அதை அவ்வப்போது உயிர்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறான் என்றும் தெரிந்தது. மலைப் பாம்பு யதேச்சையாக எது கிடைக்கிறதோ அதை

புசித்தது. அதற்குள் ஒரு யோகியின் சரணாகதியை கண்டேன். நீ என்னை படைத்திருக்கிறாய். எனக்கு என்ன தேவை என்பதை நீயே அறிவாய்,

அளிப்பாய் என்று பூரணமாக சரணாகதி செய்து விட்டுக் கிடப்பதை பார்த்தேன்.

ஒரு கர்மாவைக் கூட செய்யாமல் இருக்கும் மலைப்பாம்பிற்குகூட உணவு அளிக்கும் பகவான், எனக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை முன்னரே

நிச்சயித்து அனுப்பி விடுகிறார். அதை நினைத்து நான் கவலைப்பட வேண்டியதில்லை என்று மலைப்பாம்பு எனக்கு சொன்னது. உயர்ந்த நிலையில்

இருக்கும் யோகிகூட அப்படித்தான் இருக்கிறான். எப்போதும் ஞானானுபவத்தில் திளைப்பவனுக்கு தன் முயற்சியின்றி யாரோ, எப்படியோ, இறை

உந்துதலால் உணவை அனுப்பி வைக்கிறான். அப்படியொரு பிரம்மானந்தத்தில் திளைப்பவனுக்கு எவர் ஒருவர் அன்னமிடுகிறாரோ அவரும் மகா

பாக்கியசாலி ஆவார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தர்மத்தில் வாழ்கின்றனர். சாதுக்களாக இருந்தாலும் சரி, கிரகஸ்தராக இருந்தாலும் சரிதான். அதற்குத் தகுந்த மாதிரியான

வாழ்க்கையை இறைவன் அமைத்தே அனுப்புகிறான். ஞானியை மேலோட்டமாகப் பார்த்தால் எதுவும் செய்யாதது மாதிரி இருக்கும். ஆனால், அந்த

ஞானியின் இருப்பே உலகத்திற்கு நன்மை செய்து கொண்டிருக்கும். எவர் ஒருவர் இறைவனே கதி என்று கிடக்கிறாரோ அவரை இறைவனே பார்த்துக்

கொள்கிறார். எல்லா விஷயங்களும் இறைவனின் திருமுன் தானாக நடந்து கொண்டிருக்கும். நாம்தான் நடத்துகிறோம் என்கிற எண்ணத்தை

அறுத்தாலே போதுமானது. அது தானாக நடத்திக் கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள முயன்றாலே போதுமானது. அதில் தன்னுடைய தர்மம் எது

என்று பார்த்து, தொடர வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது ஆகும்.

பெரிய சமுத்திரத்தை கண்டேன். அது எனக்கு ஏதோ கற்றுக் கொடுக்க முயற்சிப்பதை உணர்ந்து நமஸ்கரித்தேன். உற்று சமுத்திரத்தை நோக்கினேன்.

அடுத்தடுத்து அலைகள் கரையை தொட்ட வண்ணம் இருந்தன. ஆனால், சமுத்திரத்தின் மத்தியப் பகுதி கனத்த, கம்பீர அமைதியோடு இருந்தது.

கரையருகே அலைகள் அதிகமாக இருக்கின்றன; ஆனால் மையப் பகுதியிலே ஏன் அலையே இல்லை என்று யோசித்தேன். கரை ஆழமற்று இருந்தது.

அதனால் துள்ளல் அதிகமாக காணப்பட்டது. மத்தியப் பகுதி ஒரு முனியைப்போல ஆழமுள்ளதாகவும் அடர்த்தியான அமைதியோடும் இருந்ததால்

ஆரவாரமற்று இருந்தது; அலை வீசாமல் நிச்சலனமாக இருந்தது. இது போன்று, பரமாத்ம தத்துவத்தை புரிந்து கொண்ட முனி, புரிந்து கொள்ள

வேண்டியதையெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறான்; உள்ளுக்குள் அடங்கி தன்னடக்கத்தோடு இருப்பான்.

தன்னை நோக்கி எத்தனை நதிகள் வந்தாலும் சமுத்திரம் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை. அதுபோல தன்னுள் ஆழ்ந்த யோகி, எத்தனை பெரிய

மாளிகையில் வசித்தாலும் ஆசை வயப்படுவதில்லை. ஒரு ஆன்மிக சாதகன் ஆரம்பத்தில் அழுதும் புரண்டும் அரற்றியும் தெய்வத்தை உபாசிப்பான்.

ஞானம் உதயமாகிவிட்ட பிறகு நடுக்கடலின் பேரமைதியைப்போல தன்னுள்ளே தானாக நிலைத்து விடுவான். அதற்குப் பிறகு மௌனம்தான்

இடையறாத பேச்சாக இருக்கும். ஆத்ம நிஷ்டை கைகூடி அமர்ந்திருக்கும் யோகியும் சமுத்திரமும் ஒன்று. அவனைச் சுற்றிலுமுள்ள உலகத்தின்

கரைகளில் எத்தனை அலைகள் மோதினாலும் சரிதான், நடுக்கடல் போல ஆத்மானந்தத்திலேயே திளைப்பான்.

நான் சமுத்திரத்தைப் பார்த்து எப்படி இந்த சக்தியை சம்பாதித்தாய், எப்படி இவ்வளவு ஆழமாக இருக்கிறாய் என்று மனதிற்குள்ளேயே கேட்டேன்.

அப்போது சிறு செடியின் சுள்ளியொன்று சமுத்திரத்தில் வந்து விழுந்தது. உடனே அலையொன்று அதை கரையின் ஓரத்திற்கு ஒதுக்கியது. மீண்டும்

காற்று கடலுக்குள் சுள்ளியைத் தள்ள, அலை மறுபடி கரைக்கு அதை விரட்டியது. இவ்வளவு பெரிய கடல் சிறு சுள்ளியைக் கூட தன்மீது வைத்துக்

கொள்வதில்லையே என்று யோசித்தேன். நானே அது என்ன சுள்ளி என்றும் பார்த்தேன். கடைசியில் அது பாசிச் செடியின் சிறு தண்டு என்பதை

அறிந்து கொண்டேன். சரி, இந்த பாசியை இந்த கடலில் அப்படியே விட்டால் என்ன ஆகும் என்று எனக்குள் கேள்வி பிறந்தது. ஆஹா! அது மெல்ல

மெல்ல வளர்ந்து, படர்ந்து கடலையே மூடிவிடுமே என்று பயமும் வந்தது.

இதுபோலத்தான் ஞான யாத்திரையில் செல்பவன் பாசியைப்போல இருக்கும் சிறு ஆசைகளுக்கு கூட இடமளிக்கக் கூடாது. சின்னஞ்சிறு ஆசை என்று

இடம் கொடுத்தால் அது சித்தத்தையே நாசம் செய்துவிடும் என்று சமுத்திரம் எனக்கு போதித்தது’’ என்று தத்தாத்ரேயர் சொல்ல யது மன்னன்

ஆச்சரியமானான். விடாது பொழியும் மழைபோல அவதூதர் தனக்கு போதித்த குருக்களைப் பற்றி தொடர்ந்து கூறினார்.


மேலும் ஆன்மிகம்

Tags : ஆத்ம, நிஷ்டை, கைகூடி, அமர்ந்திருக்கும், யோகியும், சமுத்திரமும், ஒன்று, ஆத்ம நிஷ்டை கைகூடி அமர்ந்திருக்கும் யோகியும் சமுத்திரமும் ஒன்று., aathma neshdai kaikoodi amarnthirukkum yoakiyum chamuththiramum onru.

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]